குறள் 786:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

Not the face's smile of welcome shows the friend sincere, But the heart's rejoicing gladness when the friend is near
அதிகாரம் - 79 - நட்பு
மு.வரதராசன் விளக்கம்
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல: இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
பரிமேலழகர் விளக்கம்
முகம்நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது.(நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார்.இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.