குறள் 785:

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

Not association constant, not affection's token bind; 'Tis the unison of feeling friends unites of kindred mind
அதிகாரம் - 79 - நட்பு
மு.வரதராசன் விளக்கம்
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.
பரிமேலழகர் விளக்கம்
புணர்ச்சி பழகுதல் வேண்டா - ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் - இருவர்க்கும் ஒத்த உணர்ச்சி தானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும். (புணர்ச்சி: ஒரு தேயத்தராதல். 'இன்றே போல்க நும் புணர்ச்சி'(புறம்.58) என்றதும் அதனை. பழகுதல் - பலகால் கண்டும் சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின், அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும் என்பதாம்.(புற.நா.217) நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்தல் என்னும் காரணம் மூன்றனுள்ளும், பின்னது சிறப்புடைத்து என்பது இதனான் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.