குறள் 787:

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

Friendship from ruin saves, in way of virtue keeps; In troublous time, it weeps with him who weeps
அதிகாரம் - 79 - நட்பு
மு.வரதராசன் விளக்கம்
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.
பரிமேலழகர் விளக்கம்
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின் அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே ஒருவனுக்கு நட்பாவது. ('ஆறு' என வருகின்றமையின், 'அழிவினைத் தருமவை' என்றொழிந்தார். 'தெருண்ட அறிவினவர'(நாலடி.301) என்புழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனுருபு தொக்கது. இனி, 'நவை' என்று பாடம் ஓதி, அதற்குப் போர் அழிவினும் செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும், 'அழிவின்கண்' என்பதற்கு யாக்கை அழிவின்கண் என்றும் உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.