குறள் 727:
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
As shining sword before the foe which 'sexless being' bears, Is science learned by him the council's face who fears
அதிகாரம் - 73 - அவையஞ்சாமை
மு.வரதராசன் விளக்கம்
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப்படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.
பரிமேலழகர் விளக்கம்
பகையத்துப் பேடி கை ஓள்வாள் - எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல்.(பேடி : பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள்.களமும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பின்றாயிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.