குறள் 728:
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
Though many things they've learned, yet useless are they all, To man who cannot well and strongly speak in council hall
அதிகாரம் - 73 - அவையஞ்சாமை
மு.வரதராசன் விளக்கம்
நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துகளைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.
பரிமேலழகர் விளக்கம்
நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர். (அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை அறிவாரில்லை என்பதாம். இனிப் 'பயமிலர்' என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.