குறள் 726:

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

To those who lack the hero's eye what can the sword avail Or science what, to those before the council keen who quail
அதிகாரம் - 73 - அவையஞ்சாமை
மு.வரதராசன் விளக்கம்
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.
பரிமேலழகர் விளக்கம்
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு? (இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?