குறள் 713:
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
Unversed in councils, who essays to speak Knows not the way of suasive words,- and all is weak
அதிகாரம் - 72 - அவையறிதல்
மு.வரதராசன் விளக்கம்
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன் படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது.
பரிமேலழகர் விளக்கம்
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகை அறியார் - அவையினது அளவையறியாது ஒன்று சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார்; வல்லதூஉம் இல் - கற்றுவல்ல கலையும் அவர்க்கு இல்லை. (அம் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல் வகைமை, கேட்பாரது உணர்வு வகைமை பற்றி வருதலால், 'சொல்லின் வகையறியார்' என்றும், அஃது அறியார் என்று எல்லாரானும் இகழப்படுதலின் 'வல்லதூஉம்இல்' என்றும் கூறினார். இதனான் அவையறியாக்கால் வரும் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.