குறள் 714:
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
Before the bright ones shine as doth the light Before the dull ones be as purest stucco white
அதிகாரம் - 72 - அவையறிதல்
மு.வரதராசன் விளக்கம்
அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்- அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க. ('ஒள்ளியார்' என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் 'ஒளியார்' என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லாரை 'வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை 'வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.