குறள் 712:
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
Good men to whom the arts of eloquence are known, Should seek occasion meet, and say what well they've made their own
அதிகாரம் - 72 - அவையறிதல்
மு.வரதராசன் விளக்கம்
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
சொல்லின் நடை தெரிந்த நன்மையவர் - சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையினையுடையார்; இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக - அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தெளிந்து சொல்லுக. (சொற்களின் நடையாவது: அம்மூவகைச் சொல்லும் செம்பொருள், இலக்கணப்பொருள், குறிப்புப் பொருள் என்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி: கேட்டற்கண் விருப்புடைமை. வழு: சொல் வழுவும் பொருள் வழுவும். (இவை இரண்டு பாட்டானும் ஒன்று சொல்லுங்கால் அவையறிந்தே சொல்ல வேண்டும் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.