குறள் 593:

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

'Lost is our wealth,' they utter not this cry distressed, The men of firm concentred energy of soul possessed
அதிகாரம் - 60 - ஊக்கமுடைமை
மு.வரதராசன் விளக்கம்
ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - இழந்தாராயினும் யாம் கைப்பொருளை இழந்தேம் என்று அலமரார்; ஒருவந்தம் ஊக்கம் கைத்து உடையார் - நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார். ('ஆக்கம்' ஆகுபெயர். ஒருவந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து - கையகத்தாய பொருள்: 'கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' (நாலடி.19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.