குறள் 592:

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

The wealth of mind man owns a real worth imparts, Material wealth man owns endures not, utterly departs
அதிகாரம் - 60 - ஊக்கமுடைமை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது
பரிமேலழகர் விளக்கம்
உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலைநில்லாது நீங்கிப்போம். ('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.