குறள் 591:
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
'Tis energy gives men o'er that they own a true control; They nothing own who own not energy of soul
அதிகாரம் - 60 - ஊக்கமுடைமை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.
பரிமேலழகர் விளக்கம்
உடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ - அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார். ('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?