குறள் 594:

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

The man of energy of soul inflexible, Good fortune seeks him out and comes a friend to dwell
அதிகாரம் - 60 - ஊக்கமுடைமை
மு.வரதராசன் விளக்கம்
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.
பரிமேலழகர் விளக்கம்
அசைவு இலா ஊக்கம் உடையான் உழை - அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும். (அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார். எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.