குறள் 57:

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

Of what avail is watch and ward? Honour's woman's safest guard
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்
மு.வரதராசன் விளக்கம்
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
பரிமேலழகர் விளக்கம்
மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா விளக்கம்
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.