குறள் 58:

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்
மு.வரதராசன் விளக்கம்
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்.
பரிமேலழகர் விளக்கம்
பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.