குறள் 56:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

Who guards herself, for husband's comfort cares, her household's fame, In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்
மு.வரதராசன் விளக்கம்
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு,தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.
பரிமேலழகர் விளக்கம்
தன் காத்துத் தன் கொண்டான் பேணி - கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து - இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் - மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.