குறள் 55:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்
மு.வரதராசன் விளக்கம்
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
பரிமேலழகர் விளக்கம்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.