குறள் 54:
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
If woman might of chastity retain, What choicer treasure doth the world contain
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்
மு.வரதராசன் விளக்கம்
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?
பரிமேலழகர் விளக்கம்
பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவனபிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?