குறள் 53:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்
மு.வரதராசன் விளக்கம்
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.
பரிமேலழகர் விளக்கம்
இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? ('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?