குறள் 52:

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்
மு.வரதராசன் விளக்கம்
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.
பரிமேலழகர் விளக்கம்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. ('இல்' என்றார் பயன்படாமையின்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.