குறள் 560:

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans' sacred lore will all forgotten lie
அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை
மு.வரதராசன் விளக்கம்
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.
பரிமேலழகர் விளக்கம்
காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். (ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.