குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
Who punishes, investigation made in due degree, So as to stay advance of crime, a king is he
அதிகாரம் - 57 - வெருவந்தசெய்யாமை
மு.வரதராசன் விளக்கம்
செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.
பரிமேலழகர் விளக்கம்
'தக்காங்கு' நாடி - ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாகநின்று ஆராய்ந்து: தலைச்செல்லா வண்ணத்தால் 'ஒத்தாங்கு' ஒறுப்பது வேந்து - பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான். (தக்காங்கு, ஒத்தாங்கு என்பன ஒரு சொல். 'தகுதி என்பது நடுவுநிலைமையாதல் 'தகுதி என ஒன்றும் நன்றே' (குறள் 111 ) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.