குறள் 559:

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain
அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை
மு.வரதராசன் விளக்கம்
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத் தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.
பரிமேலழகர் விளக்கம்
மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. (இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.