குறள் 556:

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

To rulers' rule stability is sceptre right; When this is not, quenched is the rulers' light
அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை
மு.வரதராசன் விளக்கம்
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்குப் புகழைத் தரும்.இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.
பரிமேலழகர் விளக்கம்
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம், அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப்புகழ்கள் தாம் உளவாகா. (விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் 'இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக' (நான்மணி 17 ) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால்ஒளி மன்னாவாம் : ஆகவே,தாமும் மன்னார் என்பதாயிற்று.வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின்,பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மைஇல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும்கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.