குறள் 557:
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
As lack of rain to thirsty lands beneath, Is lack of grace in kings to all that breathe
அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை
மு.வரதராசன் விளக்கம்
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப் படுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
'துளி' இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு. (சிறப்புப்பற்றி 'துளி' என்பது மழைமேல் நின்றது. 'உயிர்' என்பது குடிகள்மேல் நின்றது.மேல் 'வான் நோக்கி வாழும்' என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.