குறள் 555:

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

His people's tears of sorrow past endurance, are not they Sharp instruments to wear the monarch's wealth away
அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை
மு.வரதராசன் விளக்கம்
(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
பரிமேலழகர் விளக்கம்
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை - அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி. (அழுத கண்ணீர்: அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.