குறள் 518:
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
As each man's special aptitude is known, Bid each man make that special work his own
அதிகாரம் - 52 - தெரிந்துவினையாடல்
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால், அவனை அதற்கு உரியனாகச் செயல் பின் அவனை அதற்குரியனாமாறு உயரச்செய்க. (உயரச்செய்தலாவது : அதனைத் தானேசெய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.