குறள் 519:

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.

Fortune deserts the king who ill can bear, Informal friendly ways of men his tolls who share
அதிகாரம் - 52 - தெரிந்துவினையாடல்
மு.வரதராசன் விளக்கம்
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.
பரிமேலழகர் விளக்கம்
வினைக்கண் வினை உடையான் கேண்மை - எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை, வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும். (கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாய் நில்லாது கேளிர்செய்தொழுகும் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக்கருதுமாயின், பின் ஒருவரும்உட்பட்டு முயல்வார் இல்லையாம் . ஆகவே, தன் செல்வம்கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானைஆளும் திறம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.