குறள் 517:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

'This man, this work shall thus work out,' let thoughtful king command; Then leave the matter wholly in his servant's hand
அதிகாரம் - 52 - தெரிந்துவினையாடல்
மு.வரதராசன் விளக்கம்
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக. (கருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல் . விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.