குறள் 417:
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
Not e'en through inadvertence speak they foolish word, With clear discerning mind who've learning's ample lessons heard
அதிகாரம் - 42 - கேள்வி
மு.வரதராசன் விளக்கம்
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள்,சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - பிறழ உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார், இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்- பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார். ('பிழைப்ப' என்பது திரிந்து நின்றது. பேதைமை : ஆகுபெயர். ஈண்டுதல் : பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.