குறள் 418:
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hear
அதிகாரம் - 42 - கேள்வி
மு.வரதராசன் விளக்கம்
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம், கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள். (ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.