குறள் 416:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
Let each man good things learn, for e'en as he Shall learn, he gains increase of perfect dignity
அதிகாரம் - 42 - கேள்வி
மு.வரதராசன் விளக்கம்
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான். ('எனைத்து' , 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.