குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill
அதிகாரம் - 33 - கொல்லாமை
மு.வரதராசன் விளக்கம்
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
(அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம், கோறல் பிற வினை எல்லாம் தரும் - அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான். (அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார். ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.