குறள் 322:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
Let those that need partake your meal; guard every-thing that lives; This the chief and sum of lore that hoarded wisdom gives
அதிகாரம் - 33 - கொல்லாமை
மு.வரதராசன் விளக்கம்
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.
பரிமேலழகர் விளக்கம்
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகை உயிர்களையும் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம். ('பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின் அச்சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும் அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான் 'இது தலையாய அறம்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.