குறள் 320:
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from ill
அதிகாரம் - 32 - இன்னாசெய்யாமை
மு.வரதராசன் விளக்கம்
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.
பரிமேலழகர் விளக்கம்
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம், நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார். ('உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் 'அதுவே', (சீவக. முத்தி 164) ஆகலின், நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்' என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.