குறள் 304:

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

Wrath robs the face of smiles, the heart of joy, What other foe to man works such annoy
அதிகாரம் - 31 - வெகுளாமை
மு.வரதராசன் விளக்கம்
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.
பரிமேலழகர் விளக்கம்
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை. (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?