குறள் 303:
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget
அதிகாரம் - 31 - வெகுளாமை
மு.வரதராசன் விளக்கம்
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும்.இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.