குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
If thou would'st guard thyself, guard against wrath alway; 'Gainst wrath who guards not, him his wrath shall slay
அதிகாரம் - 31 - வெகுளாமை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால்,சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம் வராமல் காக்க, காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும். ('வேண்டிய வேண்டியாங்கு எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.