குறள் 256:

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

'We eat the slain,' you say, by us no living creatures die; Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy
அதிகாரம் - 26 - புலான்மறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லா திருப்பின்,புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.
பரிமேலழகர் விளக்கம்
தினற்பொருட்டால் உலகு கொல்லாது எனின் - பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின், விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும்இல் - பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், 'தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.