குறள் 255:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
If flesh you eat not, life's abodes unharmed remain; Who eats, hell swallows him, and renders not again
அதிகாரம் - 26 - புலான்மறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது;புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.
பரிமேலழகர் விளக்கம்
உயிர் நிலை உண்ணாமை உள்ளது - ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது - ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது. (உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், 'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்றார். 'உண்ணின் என்பது உண்ண' எனத்திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப் பாவம் கொன்றார் மேல் நிற்றலின், பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.