குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
With other beings' ulcerous wounds their hunger they appease; If this they felt, desire to eat must surely cease
அதிகாரம் - 26 - புலான்மறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்க வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
புலால் பிறிதொன்றன் புண் - புலாலாவது பிறிதோர் உடம்பின் புண், அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும். ('அஃது' என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.