குறள் 216:

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

A tree that fruits in th' hamlet's central mart, Is wealth that falls to men of liberal heart
அதிகாரம் - 22 - ஒப்புரவறிதல்
மு.வரதராசன் விளக்கம்
ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று - அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.