குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
The wealth of men who love the 'fitting way,' the truly wise, Is as when water fills the lake that village needs supplies
அதிகாரம் - 22 - ஒப்புரவறிதல்
மு.வரதராசன் விளக்கம்
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
உலகு அவாம் பேர் அறிவாளன் திரு - உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும். (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.