குறள் 217:

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

Unfailing tree that healing balm distils from every part, Is ample wealth that falls to him of large and noble heart
அதிகாரம் - 22 - ஒப்புரவறிதல்
மு.வரதராசன் விளக்கம்
ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம்,செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
செல்வம் பெருந்தகையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின், மருந்து ஆகித் தப்பா மரத்தற்று - அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும். (தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் இன்றாதல், மறைந்து நின்றாதால் , காலத்தான் வேறுபட்டாதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.