குறள் 210:

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

The man, to devious way of sin that never turned aside, From ruin rests secure, whatever ills betide
அதிகாரம் - 21 - தீவினையச்சம்
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
பரிமேலழகர் விளக்கம்
மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்' (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.