குறள் 209:
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
Beware, if to thyself thyself is dear, Lest thou to aught that ranks as ill draw near
அதிகாரம் - 21 - தீவினையச்சம்
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.
பரிமேலழகர் விளக்கம்
தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.