குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
Duty demands no recompense; to clouds of heaven, By men on earth, what answering gift is given
அதிகாரம் - 22 - ஒப்புரவறிதல்
மு.வரதராசன் விளக்கம்
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
பரிமேலழகர் விளக்கம்
மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன, கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஆகலான்,அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல. ('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?