குறள் 201:

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sin
அதிகாரம் - 21 - தீவினையச்சம்
மு.வரதராசன் விளக்கம்
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.