குறள் 200:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
If speak you will, speak words that fruit afford, If speak you will, speak never fruitless word
அதிகாரம் - 20 - பயனில சொல்லாமை
மு.வரதராசன் விளக்கம்
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக, சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக. ('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வருநிலை என்னும் அணி நோக்கி வந்தது. "வைகலும் வைகல் வரக்கண்டும்" (நாலடி 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.