குறள் 202:
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
Since evils new from evils ever grow, Evil than fire works out more dreaded woe
அதிகாரம் - 21 - தீவினையச்சம்
மு.வரதராசன் விளக்கம்
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத்தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.